Posted on Fri ,17/07/2009 by thurka
கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்;
நிலா தந்து போன வானம் – தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;
நிறைந்த வெளிகள் தோண்டி – என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் – பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..;
நீதி தவறிய அரசும் – உலக
சூது பிதற்றிய வங்கமும் – கலக
வாது ஏற்றிய சங்கங்களும் – எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;
சிதறிய அங்கமும் உடலும் – மணக்கும்
குதறிய காயமும் வடுவும் – நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
இதயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!
சூழ்ந்த கடல் என் கடல் – அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் – இதைச்
சேர்ந்த புலம் என் குலம் – நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் – என விண்ணைக்
கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
ஆக;மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்;
மரித்த தாய் மார்புறிஞ்சி – தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!
கல்லறை நீளும் வயல் வெளிகள் – நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் – செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் – எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!
விளைந்து காலெடுக்கும் வெடிகள் – பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் – சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் – நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் – என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
இருள் கவியும் நேரம்
நீள் பாதை நடக்கிறோம் நாம்.
பரவிக் கிடக்கும் நிசப்தம்
முகம் தடவி மோத விட்டு
நீள் பாதை நடக்கிறோம் நாம்
நமக்கென்று நீளும் வாழ்வு தேடி
நீள் பாதை நடக்கின்றோம் சேர்ந்து…..
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
தீண்ட வேண்டாமென்று தொங்கும்
நீள் பலகைகள் தாண்டிப் பூக்களைத்
தொட்டுப் போகின்றன பட்டாம் பூச்சிகள்.
வேண்டாமென்று நாம் சொன்னாலும்
தந்து போகின்றன வலிகளை…
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
பாதைகளில் பயணங்களில்
பறந்து பின்னகரும் இவ்வுலகைக்
கேலியுடன் நோக்கினேன்
கேள்வியுடனும் நோக்கினேன்!
காலங்களில் என் உலகு காலமாகுகையில்
வியந்து பார்க்கிறேன்!
விதியை நொந்து இருக்கிறேன்!
என் மரணத்தைத் தட்டி -
என் ஆன்மாவை அல்லாடச்செய்த -
இவ்வுலகை வியந்து பார்க்கிறேன்! – என்
விதியை நொந்து இருக்கிறேன்!
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
கண் மூடும் போதும்
கண்மணிக்குள் நிற்கிறாய் நீ.
இமைப்பது கூட கணமும்
சுமையாகிப் போனது எனக்கு.
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
உன்னுடன் வாழும் வரம் வாங்கி
வாழ வந்திருக்கிறேன் நான்..
என்னுடன் வாழும் வரம் வாங்கி – எங்கோ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ… – நான்
காத்திருக்கிறேன் உனக்காக!..
Categorized under :கவிதைகள்
Posted on Fri ,17/07/2009 by thurka
என் மனது அழ – நான்
எப்படி அனுமதிக்கலாம் என்று
உயிர் கேட்கும் போது
உதவியற்று நிற்கிறேன் நான்;
உண்மைதான்;
வலி தாங்கும் வலிமையற்ற நான்;
வலிகள் வாங்கி வரக் கூடாது…
Categorized under :கவிதைகள்
Posted on Tue ,30/06/2009 by thurka
காயங்கள் தாங்காமல்
கண்ணீர் தாங்காமல்
கலங்கி நிற்கிறேன் நான்.;
வலிக்கிறது என்கிறேன் நான்,
வலி தந்தே போகிறார்கள் எல்லோரும்.;
Categorized under :கவிதைகள்
Posted on Tue ,30/06/2009 by thurka
கலைந்து போய்க் கிடக்கிறது என் உயிர்.
மீண்டும் ஒட்ட முடியாத் துண்டுகளுடன்….
வலிக்கும் என்று பார்த்தால்
வருந்தி அழுகிறது;
என்றும் என்னைச் சுற்றி
சூழ்ந்திருக்கும் வெறுமை தாங்காமல்…
Categorized under :கவிதைகள்
Posted on Thu ,25/06/2009 by thurka
நான் எழுதி குறையாக விட்ட
கவிதைகள் காத்திருக்கின்றன,
நீ வந்து நிரம்புவாய் என்று..
இடைவெளிகளிலும்…..;
எழுத்துப் பிழைகளிலும்…;
Categorized under :கவிதைகள்